Published On: Sat, May 13th, 2017

காலையில் ஆண்குறி விறைத்தல் – தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்

காலையில் எழும்போது, ஆண்குறி விறைத்துக்கொண்டிருப்பது சாதரணமான ஒன்றா? (Is it normal to have erections in the morning when I wake up?)

ஆம், காலையில் எழும்போது ஆண்குறி விறைத்துக் கொண்டிருப்பது சகஜம் தான். அதில் பிரச்சனை எதுவும் இல்லை. நாம் தூங்கும்போது, இது போன்று பல முறைகள் ஆண்குறி விறைக்கும், ஆனால் அப்போது நமக்குத் தெரியாது. எழும்போது தான் நமக்கு தெரிகிறது. இதை மருத்துவத் துறையில் தூங்கும்போது இரத்த ஓட்டம் பாய்வதால் ஏற்படும் வீக்கம் (விரிவடைதல்) என்பர், ஆங்கிலத்தில் நாக்டர்னல் பீனைல் டர்மெசென்ஸ் (NPT) என்பர். பேச்சுவழக்கில் ஆங்கிலத்தில் இதனை மார்னிங் வுட் (காலை கட்டை), மார்னிங் க்ளோரி (காலை பெருமை), டாவ்ன் ஹார்ன் (இரவுக் கொம்பு) என்றும் குறிப்பிடுவதுண்டு.

ஆண் குறியில் உள்ள இரத்த நாளங்கள் விரிவடைந்து, ஆண்குறிக்கு இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் தசைகள் தளர்வடைவதாலேயே ஆண்குறி விறைக்கிறது. இந்தச் சிக்கலான செயல்பாட்டில் பல்வேறு இடைப்பட்ட செயல்கள் உள்ளன, பல்வேறு நரம்பு மண்டலப் பகுதிகள் இதில் ஈடுபட்டுள்ளன. மைய நரம்பு மண்டலம் (மூளை), தண்டுவட நரம்பு மண்டலம் மற்றும் புற நரம்பு ஆகிய பகுதிகளில் உள்ள நரம்புகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. ஆண் குறி விறைப்பு செயல்பாட்டின் கடைசி இடையீட்டுக் காரணி (மீடியேட்டர்) நைட்ரிக் ஆக்சைடு (NO) ஆகும். அதுதான் ஆண் குறிக்கான இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் தசைகளைத் தளர்த்தி, ஆண் குறியில் உள்ள இடைவெளிகளில் இரத்தம் நிரம்பி, ஆண் குறி விறைப்பை ஏற்படுத்துகிறது.

தூக்கத்தின்போது ஆண் குறி விறைக்கும் செயல்முறையானது விழித்திருக்கும்போது விறைக்கும் செயல்முறையிலிருந்து வேறுபட்டது என்று கருதப்படுகிறது. தூங்கும்போது ஏற்படும் விறைப்புகள் தூக்கத்தின் துரித கண் நகர்வுக் கட்டத்துடன் (REM எனப்படும் ராப்பிட் ஐ மூவ்மென்ட்) சம்பந்தப்பட்டுள்ளன. தூக்கத்தின்போது ஒரு கட்டத்தில் கண்கள் துரிதமாக சீரற்று அசையும். இந்த நிலையையே REM தூக்கம் என்கிறோம். இந்த நிலையில் உடலின் தசைகள் மிகவும் தளர்ந்து இருக்கும், தெளிவான கனவுகளும் தோன்றும். 5 முதல் 8 மணி நேரம் வரை தூங்கும் ஒரு ஆரோக்கியமான ஆணுக்கு, இந்தக் கால அளவிற்குள் 2 இலிருந்து 6 முறை ஆண் குறி விறைக்கலாம்.

REM தூக்கத்தின்போது ஏதேனும் ரசாயனமோ அல்லது ஹார்மோனோ வெளியிடப்படலாம், அதுவே ஆண் குறி விறைப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தண்டுவடப் பகுதியிலேயே நடக்கலாம், இதில் மூளையின் பங்களிப்பு சிறிதளவு இருக்கலாம் (விபத்தில் கழுத்துப் பகுதியில் தண்டுவடம் வெட்டப்பட்ட நபர்களுக்கும் தூக்கத்தின்போது ஆண் குறி விறைக்கலாம்). இரவு நேரத்தில் ஆண் குறி விறைப்பதற்கு ஆண் செக்ஸ் ஹார்மோன்கள் (ஆண்ரோஜன்கள்) முக்கியக் காரணமாகக் கருதப்படுகின்றன. இரவில் ஆண் குறி விறைக்காதவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சை அளிக்கப்படுகையில் அவர்களுக்கு இரவில் ஆண் குறி விறைத்தலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது, அதிலிருந்து இந்த ஹார்மோன்களின் பங்கு தெளிவாகிறது.

இரவின் போது ஆண் குறி விறைக்கும் செயலானது உடலின் வளர்சிதை மாற்றத்தைப் பராமரிப்பதற்கு அவசியமானதாக இருக்கலாம். நீண்ட நேரம் தேவைப்படாத போதும் ஆண் குறி விறைப்புத் திறனைப் பராமரிப்பதற்குத் தேவையான வளர்சிதை மாற்ற அம்சங்கள் சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்வதற்காக, இரவில் இப்படி ஆண் குறி அவ்வப்போது விறைக்கலாம். இரவு நேரத்தின்போது ஆண் குறி விறைப்பதால் மற்றொரு நன்மையையும் இருக்கலாம். உறக்கத்தின்போது சிறுநீர் கழிக்காமல் தடுப்பது. அதாவது ஆண் குறி விறைத்திருக்கும்போது சிறுநீர் கழிக்க முடியாதபடி ஆண்களின் உடல் அமைப்பு உள்ளது.

சொல்லப் போனால், தூக்கத்தின்போது ஆண் குறி விறைப்பு ஏற்படாமல் இருப்பது ஆண்மையின்மையின் அடையாளமாக இருக்கலாம். சில சமயம் வயதாவதால் ஏற்படும் ஆண்மை குறைவா அல்லது உளவியல் காரணங்களால் ஏற்பட்ட ஆண்மை குறைவா என்று வேறுபடுத்தி அறிந்துகொள்வதற்காக மருத்துவர்கள் NPT கண்காணிப்பு சோதனைகள் (இந்தச் சோதனையின்போது, இரவில் தூக்கத்தின்போது ஆண் குறி எப்படி விறைக்கிறது என்பதைக் கண்காணிக்க ஒரு கருவி ஆண் குறியில் கட்டப்படும்) செய்யலாம்.

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts